http://kasilingam.com/
நம் முதல் வலைப்பதிவு
நம் முதல் வேலை, ப்லாக்கர்.காம் இணையத்தளத்தில் நமக்கு ஒரு கணக்கு (account) துவங்குவது. யாஹூ போன்ற மின்னஞ்சல் சேவைகளில் துவக்கியிருப்போமே, அதுபோலத்தான். சொல்லப்போனால் இது அதைவிடவும் மிக எளிமையானது. அங்காவது ஊர், உறவு விபரமெல்லாம் கேட்பார்கள், இங்கே எதுவும் இல்லை. நமக்குத் தேவையெல்லாம் ஏற்கனவே நாம் பயன்படுத்தும் ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டுமே. அத்துடன், ப்லாக்கர்.காம் தளத்துக்கு நாம் ஒரு ‘பயனர்-பெயர்’ தெரிவுசெய்துகொள்ளவேண்டும். சரி ஆரம்பிக்கலாமா? அதற்குமுன், உங்கள் கணினியில் எ-கலப்பை இயங்கிக்கொண்டிருக்கட்டும், இணையத்தொடர்பு ஏற்படுத்தப் பட்டிருக்கட்டும். (இங்கே கீழே உள்ள படங்களை இன்னும் தெளிவாக, பெரிதாய்ப் பார்க்க வேண்டும் என்றால், அவற்றின் மேல் சொடுக்குங்கள்.)
நான் என் பயனர்-பெயராக kasiblog என்பதைப் பயன்படுத்தப் போகிறேன். முதலில் இணைய உலாவி(internet browser)யில{{http://www.blogger.com/}}க்குப்போய் CREATE YOUR OWN BLOG என்பதற்குக் கீழ் உள்ள Start Now! என்ற பொத்தானை சொடுக்குவோம். அது நம்மை கணக்குத் துவங்கும் படிவத்துக்கு இட்டுச்செல்கிறது.
அங்கே நாம் தெரிவுசெய்து வைத்துள்ள பயனர்-பெயர், மற்றும் நம் விபரங்களை இடுகிறோம். பிறகு ஒரு கடவுச்சொல்லை(paasword)யும் தெரிவுசெய்கிறோம். அங்கு ப்லாக்கர்.காம் தளத்தின் விதிமுறைகளை கடைப்பிடிப்பதாக ஒத்துக் கொண்டு குறியும் இடுகிறோம். பிறகு அடுத்த கட்டத்துக்குச் செல்ல next பொத்தானைச் சொடுக்குகிறோம். அது நம்மைப் புதிய வலைப்பதிவு துவங்கும் படிக்கு கூட்டிப் போகிறது,
1. இங்கே தான் நம் வலைப்பதிவின் பெயர், மற்றும் வலைப்பதிவின் விபரம் ஆகியவற்றை இடுகிறோம். உலாவியில் view→encoding→Unicode(utf-8) என்று தெரிவு செய்து கொண்டு, எ-கலப்பையில் alt+2 தேரிவுசெய்வதன்மூலம் நம்மால் இந்த விபரங்களைத் தமிழிலேயே உள்ளிடமுடியும். படத்தில் பாருங்கள் நான் செய்ததை. இங்கு இன்னொன்று: நம் வலைப்பதிவை பொதுப் பட்டியலில் வெளியிடலாமா என்று கேட்கப்படும் கேள்விக்கு ‘ஆம்’ என்றும் தெரிவு செய்வோம். அடுத்த கட்டம்…
2. இனி, நாம் செய்யப்போகும் வலைப்பதிவை எந்த இணையத்தளத்தில் வாயிலாகப் பதிப்பிக்கப்போகிறோம் என்று சொல்ல வேண்டும். இப்போதைக்கு நாம் ப்லாக்கர்.காம் இலவசமாக அளிக்கக்கூடிய ப்லாக்ஸ்பாட்.காம்(blogspot.com)மையே பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம். எனவே அதையே தெரிவுசெய்யலாம்.
3. இங்குதான் நம் வலைப்பதிவின் உரல் (URL) என்னவென்பதைத் தெரிவுசெய்யப் போகிறோம். இந்த உரல் தனித்துவத்துடன் இருக்கவேண்டுமாதலால், நாம் தெரிவுசெய்தது ஏற்கனவே பயனில் இல்லாமல் இருக்கவேண்டும். நான் ulmanam என்று தெரிவுசெய்கிறேன். இதை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டியிருப்பதால், இங்கே எ-கலப்பையில் alt+1 தெரிவு செய்யவேண்டியிருக்கும். மீண்டும் விதிமுறைகளை ஒத்துக்கொண்டு அடுத்த கட்டத்துக்குப் போகலாம்.
4. அப்பாடா! ulmanam.blogspot.com இன்னும் யாராலும் எடுத்துக்கொள்ளப் படாததால், எனக்குக் கிடைத்துவிட்டது! இல்லாவிட்டால் வேறு எடுக்கச் சொல்லும். என்ன, நீங்களும் உங்கள் விபரங்களைக்கொண்டு இதெல்லாம் கூடவே செய்துகொண்டு வருகிறீர்கள்தானே? இப்போது, நம் வலைப்பதிவின் தோற்றம் எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தெரிவுசெய்யலாம். நான் எனக்குப் பிடித்த ஒன்றை ‘Use this’ என்று சுட்டிக் காட்டுகிறேன். இனி அடுத்த கட்டம்…
அட! அவ்வளவுதான். இதோ ‘உங்கள் வலைப்பதிவை உருவாக்குகிறேன்’ என்று ஒரு அறிவிப்பு வந்த சில நொடிகளில்…
இடுகைகளை உள்ளிடும் சன்னலுக்கு நம்மை அழைத்துப் போகிறது. இதோ நம் முதல் இடுகையை தட்டச்சு செய்யலாமா? இன்னுமொருமுறை எ-கலப்பையில் alt+2 தெரிவுசெய்துகொண்டு, நாம் எழுத ஆரம்பிக்கலாம். முதல் இடுகை சிறிய அறிமுக இடுகையாக இருக்கட்டுமே. சில வரிகளுக்குள் முடித்துக்கொண்டு, முன்பார்வையிட வேண்டி Preview Your Post என்ற பொத்தானை சொடுக்கலாம்.
ஆகா! நன்றாக வந்திருக்கிறதே! ஏதும் எழுத்துப்பிழை இருந்தாலோ, நமக்கு ஏதும் மாற்றம் வேண்டுவதாய் இருந்தாலோ, மறுபடியும் மாற்றவும் வழி இருக்கிறது. திருப்தியாக இருந்தால், Publish your post பொத்தானை சொடுக்கி பதிப்பிக்கலாம்.
இதோ, பதிப்பித்தல் வெற்றி என்று சொல்கிறது. அத்துடனே, நம் புதுக்குழந்தையை நேரடியாகப் பார்த்து உச்சி மோர இங்கேயே ஒரு தொடுப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதோ view blog என்ற சுட்டியை சொடுக்கலாம்.
இப்போது, புதிய சன்னலில் நம் வலைப்பதிவு காணக்கிடைக்கிறது. இப்போது நாம் காணும் இதே வடிவம், உலகம் முழுக்க எங்கிருந்தும் காணக்கூடியதாகும். உலாவியின் முகவரிக்கட்டத்தில் நம் வலைப்பதிவின் முகவரி இருப்பதைப் பார்க்கலாம். இங்கே http://ulmanam.blogspot.com என்று இருக்கிறது. உங்கள் உலாவியில், நீங்கள் தெரிவுசெய்தபடி இருக்கும். இந்த முகவரிதான் இனி உங்கள் அடையாளம். இதை நீங்கள் நகலெடுத்து உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பலாம். மற்ற தமிழ் வலைப்பதிவுகள் பட்டியலில் சேர்க்கலாம். இன்னும் என்ன என்னவெல்லாமோ செய்யலாம்.
இந்த பல படிகளில் சிலசமயம் விண்டோஸ்98 வகைக் கணினிகள் வைத்திருப்பவர்களுக்கு சில பிரச்னைகள் வரலாம். அவற்றை தனியாகப் பார்க்கலாம். இனிமேல், புது விஷயங்களை இடுவதானால், ப்லாக்கர்.காம் தளத்திற்குப் போய் நம் பயனர்-பெயரையும், கடவுச்சொல்லையும் இட்டு வேண்டியதைச் செய்யலாம். அடுத்த பாகம் வரை நிறைய எழுதுங்கள். நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். சில நண்பர்கள், ‘என்ன உன் எழுத்து கட்டம் கட்டமாகத் தெரிகிறதே, படிக்கமுடியவில்லையே’ என்று சொல்லலாம். அசந்துவிடாதீர்கள்:) அதை எப்படி சமாளிக்கலாம் என்று அடுத்த பாகத்தில் பார்க்கலாம்!
-இன்னும் வரும்.
முகப்புப் பக்கத்துக்கு மீள... | அடுத்த பாகத்துக்குச் செல்ல...
e-sangamam_5.txt · Last modified: 2006/09/09 09:14
No comments:
Post a Comment